Thursday, August 15, 2013

என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

<சுதந்திர தினத்தன்று சுதந்திரமாய் நான் படைத்த கவிதையினை சுதந்திரமாய் விமர்சியுங்கள் .....தவறுகள் திறுத்தப்படும்

 என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

 என்னருமை சுதந்திரமே எங்கேயிருக்கின்றாய்?
என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

 நாற்பத்தேழில் பெற்றாலும்
 அறுபத்தேழிலும் எழ மறுக்கும் குழவியாய் !

 ஒருவரிடம் ஒடுங்கி நின்ற நூறாண்டு காலம் போய்
மாறி மாறி துச்சாதனரால் துகிலிழக்கும் காரிகையாய் ! 

வாணலியின் சூட்டுக்கு வாட்டம் கண்டு தப்பி விட்டு
அடுப்பினிலே நேராக வீழ்ந்து விட்ட அபலையாய்!

 இருளிலே பெற்றதாலே விடியவே யில்லையென்றார்
விடிந்து வெகு நாளானாலும் நீதான் வீணே காந்தாரியாய்!

 எங்கு சுதந்திரம் எதிலே சுதந்திரம் ?
எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் !

 பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையுமே
பாலினக் கொடுமைகளுக் காளாகும் சுதந்திரம் !

 நூலிழை இடுக்கினிலும் நுழைந்தே புறப்பட்டு
 நூதனமாய் தப்பிக்க சட்டத்திலே சுதந்திரம் !

 பத்து கொலை செய்தாலும் பதவி தரும் சுதந்திரம்!
 வித்தகனாய் வீதிவலம் வந்திடவே சுதந்திரம் !

 வாலில்லா வானரம் போல் கட்சி தாவும் சுதந்திரம்!
காளையை பசுவென்று பால் கறக்கும் சுதந்திரம் !

 பதவியிலிருந்தாலே பலவகையில் சுதந்திரம்!
 பதவிக்கே மானத்தையும் அடகு வைக்க சுதந்திரம் !

 பேசியே ஏமாற்றும் பேயர்களின் காலம் போய்
ஊமைகளும் இங்கு வந்து ஊர் கெடுக்கும் சுதந்திரம் !

 கோலூன்றும் வயதினிலும் கோடிகள் குவித்திடவே
கோலொச்சும் அரசனுக் கொப்பான சுதந்திரம்!

 ஊழலில் முத்தெடுக்க கிழவனுக்கும் சுதந்திரம்!
 ஊர் பணத்தைத் தின்றாலும் உத்தமனாய் கௌரவம் !

 முற்பட வேண்டுமென்ற முனைப்புகள் செத்து விட்டு
பிற்படுத்தப் பட்டவனாய் பெருமை கொள்ளும் சுதந்திரம் !

 நல்லவர் நகர்ந்து நிற்க நயவஞ்சகர்க்கும் சுதந்திரம்!
சொல்லொனா தீமைகளில் திளைத்திடவே சுதந்திரம் !

 தன்னையே அர்ப்பணித்து நாடு மீட்ட சுதந்திரம் – இன்று
 நாட்டையே அர்ப்பணிக்க அமைச்சனுக்கும் சுதந்திரம் !

 ஏழையின் சிரிப்பினில் இறைவன் என்பார்!
இறைவன் ஒருவன் இல்லையென் றுரைப்பார்!

 பசித்திரு விழித்திரு என்றார் !இவரிங்கு
பசியாலுன் விழிமூட பிழைத்து விட்டார் !

 எப்படியும் இருக்கலாம் என்று சொன்னால் சுதந்திரம்!
இப்படியும் இருக்கலாம் சொன்னவர் நம் "கலாம்" !

 ஒரு கலம் சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பார்
 ஒரு "கலாம்" போதாது ! நூறு கோடி வேண்டுமிங்கு !!!