புதுக்கவிதை தொகுப்பு
( நானும் புதுக்கவிதை எழுதினால் என்னவென்று முயற்சி செய்தபோது!)
1 அறிவை எனக்கருள்
உன்னை வணங்கினால் அருள்வாய்
என்றறிவேன் ஆண்டவனே - ஆனால்
உன்னை வணங்கும் அறிவை எனக்கருள்!
------
2. மேகம் 16-07-1983
நீல வானத்தின் நிர்வானத்தை - நின்
கருப்பு ஆடையால் மூட முடியாமல் நீ
வடிப்பது தான் மழைக்கண்ணீரோ?
-----
3. மாறிய காலம் 16-07-1983
காலம் மாறிவிட்டது - ஆம்
பாருங்கள்
பலர்முன்னே வெட்கமின்றி தன்
மலைக்காதலனை தழுவி நிற்கின்றாள்
இந்த கார்மேகப்பெண்!
நாணத்தால் முகம் சிவக்கும் என்பார்கள் - ஆனால்
இவளுக்கு ஏன் முகம் கருக்கிறது? ஆம்
காலம் மாறிவிட்டது!
----------
4. அதிருஷ்டசாலி 05-08-1983
அழகிய பெண்ணே !
காதலிக்கிறேன் என்றேன்!
அவளோ
அண்ணி அதிர்ஷ்டசாலி என்றாள்!
-------
5. கடன் 13-02-1984
பெண்ணே
உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?
மானிடம் கண்ணைப்பெற்றாய்
தேனைப்போல் குரலைபெற்றாய்
குயிலிடம் குரலைபெற்றாய்
மயிலிடம் சாயல் பெற்றாய்
இன்று
என் இதயத்தையும் கேட்கிறாயே !
உனக்கு கடன் வாங்கித்தான் பழக்கமா?
------
6 .வசந்த வாழ்வு 22-03-1984
ஆண்டவா
என் வாழ்வு முழுவதும்
பூஞ்சோலையாக்க நான் வேண்டவில்லை
ஆனால்
ஒருசில வசந்தங்களையேனும் கொடு!
ஆனால்
வசந்ததிலேயே வாழ்வு முடியட்டும்!
-------
7. பெண்ணே
உன் கண்கள் என்ன
நட்சத்திரங்களோ என
ஐயுற்றேன்
பிறகு தான் தெளிந்தேன்
முழு நிலவுக்குள்
ஏது
நட்சத்திரமென்று?
பெண்ணே
எல்லோரும் உனைப்பார்த்து
கவிதை படைக்கின்றனரே
அவர்கள் கவிஞர்களா?
இல்லை! இல்லை!
வெறும் காப்பி(copy ) அடிப்பவர்கள்!
ஏனென்றால்
நீயே ஒரு கவிதை தானே!
---------
8 தனிமை 04-07-1984
தனிமையே !
உன்
கொடுமை உனக்கெப்படி
தெரியும்?
நீதான்
எப்போதும் என்னுடனே
இருக்கிறாயே!
----------
9. பசலை 05-10-1985
சங்க கால நாயகிக்கு
கைவளை
நழுவியது பசலை நோயால்!
ஆனால்
என்னவளுக்கோ நான் அருகிருக்கும்போதே!
காரணம் கேட்டால்,
கண் இமைக்கிறாளாம்!