Thursday, December 30, 2021

                                          அமைதியின் தவிப்பு       25-02-1983


நீலக்கடலினிலே நின்றன் முகம் பார்ப்பதினால்

நிலையற்ற வாழ்வினிலே நிம்மதியை தேடுகின்றேன்!


காலைக் காற்றிலுந்தன் காதல் மொழி கேட்பதினால் 

காலம் முழுவதும் யான் கவிதையுளம் நாடுகின்றேன்!


மேலைச் செவ்வானில் சிவந்தமுகம் தோன்றுவதால்

மாலை வரும்முன்னே மனம்மயங்கி தேடுகின்றேன்!


கோலவிழியிரண்டும் குளிர்நிலவாய் காய்வதினால்

மாலைமங்கியிருள் மண்டிவரத் தவிக்கின்றேன்!


ஞால முழுவதிலும் நங்கையுனை காண்பதினால்

சீலம் மறந்தொழுகி சிந்தைநிலை கலங்குகின்றேன்!


வாலைப் பருவமதில் வஞ்சியுனைக் கண்டதினால்

வேலைச் சுழிக்காற்றில் துளியாகித் துடிக்கிறேன்!     

                                                 எதுவழகோ           20-10-1980


காலைக் கதிரவன் பொன்னொளியில்

களிப்பாய் மலரும் தாமரையோ !


காளை அவன் முகம் கண்டவுடன்

கனிந்து சிவந்த நின் முகமோ?


மாலைக் காற்றின் இதமுடனே

காலைத் தழுவிடும் வெள்ளலையோ !


சேலை துவள நடை பழகும்

சேயிழை உந்தன் நடையழகோ?


முள்ளின் துணையில் ரோஜாவோ!

முல்லை போன்ற நின் சிரிப்போ?


கங்கையினழகோ காவிரியழகோ

மங்கையுனது உடலழகோ?  


இருண்ட வானின் கார்முகிலோ

சுருண்ட குழலுடை பெண்மயிலோ!


மருண்ட விழியுடை மானினமோ!

செறிந்த பொருளுடை நின்விழியோ?


பற்றுக்கொம்பில் பூங்கொடியோ

கற்புக்கரசி தேவதையோ?


சந்தம் சிறந்த கவிதைகளோ

சாந்தம் தவழும் புவிமகளோ?


முத்தோ மணியோ மரகதமோ

அச்சோ ! அறியேன் எதுவழகோ?





 

 

                                            காரணம் யாதென


கண்கள் செருக துயில் கொண்டேன் -   கண்ணே

கனவுகளைத் தான் கண்டேன் !

மன்னவன் போலே முடிசூட்டி - கண்ணே 

மக்களையும் தானாண்டேன் !


மாட மாளிகை நானெழுப்பி - கண்ணே

மமதையுடன் தானிருந்தேன் !

சேடிகள் பலரும் புடைசூழ - கண்ணே

செருக்குடனே தானலைந்தேன்!


மறுமை இம்மை எப்பொழுதும் - கண்ணே 

மக்கள் என்னை நினைக்க 

வறுமை தன்னை நானழித்து - கண்ணே 

வளங்கள் பலவும் நான் புரிந்தேன் !


சந்திரன் சூரியன் நான் படைத்தேன் - கண்ணே 

மந்திரமும் நான் பயின்றேன் 

இந்திரன் முதலா தேவர்களை - கண்ணே 

மந்திரியெனவே நான் கொண்டேன் !


மாண்டவர் மீள வரமளித்து - கண்ணே 

மக்களையும் நான் படைத்தேன்

ஆண்டவன் போலே எனை நினைத்து - கண்ணே 

ஆனந்தமய   மாயிருந்தேன் !


இன்னும் பலவும் இப்படியே - கண்ணே

கனவுகள் தொடர்ந்ததடி !

மின்னும் அழகுடன் ஆரணங்கே  - உன்னை 

கண்கள் நேரில் கண்டவுடன் 


நித்திரை என்பது தொலைந்ததடி  - கண்ணே

கனவுகள் காண்பது நின்றதடி !

எத்தனை முறைதான் நான் முயன்றும் - கண்ணே

காரணம் யாதென புரியேனடி!.


Tuesday, December 28, 2021

Written on the occassion of 90th birthday of Kandamangalam Shri Sadasiva Iyer.


கண்டமங்களத்திலுதித்த

 கவிப்பெருந்தகையே - உனை

கண்டதுமெனுள்ளத்தில் 

பொங்குதோரு கவியே!


உமை பாகன் பெயர் கொண்டி
வுலகினில் அவதரித்தாய்!
எமை காக்க எம்நடுவே 
உலவிடும் சிவனானாய்!

அலமேலு கரம்பிடித்து
ஆதவனுமானாய் நீ - உனை
அண்டியவர்க்கனுதினமும்
ஆலமரமானாய் நீ!   --  (கண்ட)
 
நாராயணன் நாமமுன்தன்
நாவினுக்கு அலங்காரம்- அதை
நாள்தோறும் நவின்றிட்டே
நாரதனை விஞ்சிடுவாய்!

திருமால் மருகனையும்
தினந்தோறும் மறவாமல்
திருப்புகழ் பாடிவந்த
நின்புகழ் ஒங்கட்டுமே! --- ( கண்ட)

ஏகாதசி நாளிலுந்தன்
பக்தியது பெரிதே - உந்தன்
ஏகாந்த மௌனத்தின்
ஏற்றமது அழகே!

சாகாவரம் பெற்றுனையே
சார்ந்திருக்கும் சந்ததியர்க்கு
மீகாமனைப்போலே -வழி
காட்டிடவே வேண்டுமய்யா!  -  (கண்ட)

தொண்ணூறை கடந்தும் பக்தி
தொண்டினையே ஆற்றுகின்றாய!-இன்னும்
பலநூறு காண்பதற்கு அந்த பரமனையே வேண்டிடுவோம்!


வாழ்த்திடவே வயதில்லை
வணங்கிடவே அனுமதிப்பாய்! -உன்
தாளினுக்கு நமஸ்காரம்
தயவுடனே ஏற்றிடுவாய்!

பிரியமுடன் பாரதத்தில் 
அமைதியுடன் வாழ்வதற்கே
ஆவமுத வெண்ணெயுண்ட
மாலிவனின் நமஸ்காரம்!

ஆவமுத வெண்ணெயுண்ட
மாலிவனின் நமஸ்காரம்
ஆசிகள் பலகோடி
தந்தருள வேண்டுமைய்யா!

 பிறந்த நாள் வாழ்த்துக்களே!  ( Written on My Lady's birthday 24-04-2021)

__________________________
என் கண்களையே நானுமிங்கு காதலிக்கிறேன்
மத்தியிலே மணியாக நீயிருப்பதால்!

என்னிமையை தான் நானும் காதலிக்கிறேன்
கண்மணியாம் உன்னையே காத்து நிற்பதால்!

நாசிகளிரண்டையும் நான் நேசிக்கின்றேன்
சுவாசமாய் நீயம் வந்து சுழன்று செல்வதால்

செவிகளிரண்டையும் நான் சேவிக்கின்றேன்
மாசற்ற உன் குரலில் மயங்கியிருப்பதால்

கைகளிரண்டையும் நான் காதலிக்கிறேன் உனை
வாரியணைத்திடவே வகை செய்வதால்!

கால்களிரண்டையும் நான் காதலிக்கிறேன்
என்னோடு உன்னையுமே தாங்கி நிற்பதால்!

எலும்புகளனைத்தையும் நான் காதலிக்கிறேன் அதில்
லஜ்ஜையோடு மஜ்ஜையாய் நீ கலந்திருப்பதால்!

உதிரத்தை ஓயாமல் நான் காதலிக்கிறேன் அதில்
உயிரணுவாய் நீ கலந்து ஓடி வருவதால்!

குணத்தை நானும் கும்பிட்டு கரம்குவிக்கிறேன் அதில்
குன்றாவிளக்கை ஒப்ப நீ ஒளிர்வதால்!


மனதை நானும் மாளிகை யாக்கி நிற்கிறேன் நீ
மாட்சிமையோடு ள்ளிருந்து ஆட்சி செய்வதால்!

மொத்தத்தில் என்னையே நான் காதலிக்கிறேன் உள்ளே
சத்தமின்றி சாந்தமாய் நீ அமர்ந்திருப்பதால்!

எனக்குள்ளே வீற்றிருக்கும் இனியவளே நமக்கின்று
இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்களே!

       வாராமல் போனதென்ன?

(Dedicated to the daughter I never had)

பிஞ்சுக் கால்களால் என்
நெஞ்சை உதைத்திட்டு
கொஞ்சு மொழிபேசி மனம்
கொள்ளை கொள்ளாமல்
வஞ்சகியே நீயும்
வாராமல் போனதென்ன?

வண்ணப் பட்டாடையோடு
சின்ன கொலுசு நடை
சிங்கார புன்னகையால்
எண்ணம் கவர்ந்திடவே
என்னிடம் நீ வாராமல்
எங்கே தான் சென்றாயோ?

தாய்க்கு நல்ல மாமியாராய்
தந்தைக்குற்ற தோழியுமாய்
தம்பிகட்கு தாயுமாகி
தரணிக்கே ராணியென
வளர்த்திடவே நான் நினைத்தேன்
சீரும் சிறப்புடனே
பேரும் பெருமையுடன்
தேரேறி பவனி வர
வாராமல் போனதென்ன?

Thursday, March 8, 2018

This Poem is dedicated to all the women in my life, who played their part to make me as I am today.... Happy women's Day to all my women friends.. 
கண் காது மூக்கும் கைகளும் கால்களும்
அமையும் முன்பே எனைத் தாங்கி
கூன் குருடு செவிடு பேடு நீங்கி நான் பிறக்க
கருவறையின் இருட்டினிலே காத்தவளும் பெண்ணொருத்தி!
கருவறையை நான்தாண்டி தரணிக்கே தான் வந்து
தரையிலே விழும் முன்பே தாங்கியதும் பெண்ணொருத்தி!
பிஞ்சுநடை காலத்தில் தள்ளாடி நான் விழவே
கொஞ்சுமொழி பேசியே எனை எழுப்பியதும் பெண்ணொருத்தி!
பள்ளிப் பருவத்திலே பலர் போற்ற எனைமாற்றி
பாங்குடனே பாடம் பல புகட்டியதும் பெண்ணொருத்தி!
என்னுலகின் முதல் ஆணாம் எந்தையை காட்டியதும்
என்னையும் ஆண்மகனாய் உலகிற்கு உணர்த்தியதும்
ஆதிமுதல் அந்தம்வரை இடைப்பட்ட காலமெல்லாம்
பெண்ணின்றி வாழ்வில்லை பெண்மைக்கு நிகரில்லை!
சக்தியின்றி சிவமில்லை! சிவமின்றி அவளில்லை!
நாணயத்தின் இருபுறம் போல் இருவரின்றி வேறில்லை!
ஆண்மையைப் பெற்று நீயும் அர்த்தநாரி ஆவதற்கு
அர்த்தமுள்ள நாரியாய் அகிலத்தில் வலம்வருவாய்!
பெண்ணிற்கு பலபெருமை பெண்மையில் தானன்றி
ஆணுக்கு இணையான ஆண்மையில் வருவதில்லை!
பெண்மையென்றாலது தாய்மை! பெண்மையென்றாலது மென்மை!
பெண்மையென்றாலது இனிமை! பெண்மையென்றாலது முழுமை!
பெண்மையை கொண்டாட நாளொன்று ஏனிங்கு?
முழுமையுற்ற பெண்மைக்கு முழுவருடம் போதாது!