Tuesday, March 8, 2011

A tribute all women I respect and admire

                                                       பெண்மையின் பரிமாணம்  

தங்கத் தமிழ் பாடல்களில்
  சங்க கால மங்கையரை
மங்கலமாய் போற்றிப் பல
  பழங்கதைகள் சொன்னதுண்டு.

முறத்தினாலே புலியதனை
   துரத்தி விட்ட பெண்ணவளும்
அறப்போரில் மகனிறப்பை
  அறிந்து மகிழ்ந்த தாயவளும்

களப்போரில் கலமேந்தி
  கயவர்தலை கொய்தவளும்
கணவன்தனை தலையிலேந்தி 
  கணிகையிடம் சென்றவளும்

நமன்தனையே எதிர்கொண்டு
  மணந்தவனை மீட்டவளும்
கொண்டவனையிழந்ததாலே
  கொழுநகரை எரித்தவளும்

கற்புடனே கணவனோடு
  கானகமே சென்றவளும் 
அற்பர்களால் துகிலிழந்து
  அருஞ்சபதம் செய்தவளும்

கட்டியவன் சாபத்தாலே 
  கல்லாகி போனவளும்
பெண்ணினத்தின் பிரதிநிதியே
பெண்மைக்கு இலக்கணமே.

பெண்ணிற்கிங்கே பெருமைகளும்
   பாரதத்தில் பலவுண்டு
நாடும் மொழியும்  பெண் என்றார்
  ஓடும் நதியும் பெண் என்றார்

ஏடு கல்வி கலையதுவும்
  எட்டுவித செல்வங்களும்
நாடு காக்கும் வீரமதும்
  நங்கையினம் எனச்சொன்னார்.

பிஞ்சுமனம் கொஞ்சு மொழி 
  பருவமதில் தகப்பன் என்றும்
அஞ்சுகத்தை அரவணைக்க
  அன்பான கணவன் என்றும்

பஞ்சுசிகை காலமதில்
  பாங்குடனே தனயன் என்றும்
பெண்ணிற்கிங்கே காவலென்று 
  பெரியோர்கள் சொன்னதுண்டு.

எந்தவொரு பருவத்திலும்
  ஏந்திழைக்கு காவலது
அச்ச (ம் ) மட நாணமென்று
  அறிந்தவர்கள் சொல்வதுண்டு.

அச்சம் மடம் நாணமென்று
  அஞ்சி வாழ்ந்த மங்கை நீயும்
துச்சமென அச்சம் வென்று
  இச்சையோடு வாழ்கின்றாய்.

அடிமேல் அடி எடுத்து
  அடிமைத்தளை உடைத்திட்டாய்
"இவனுக்கே" நான் நிகரென
    அவனிக்கே உரைத்திட்டாய்.

நிலாச் சோறு ஊட்டியவள் 
  நிலவை பிடிக்க விழைகின்றாய்
கலை பலவும் கற்றுணர்ந்து 
  தலை சிறந்து வாழ்கின்றாய்.

பெண்ணுனக்கு எதிரியென்று
 பெயரளவில் யாருமில்லை
பெண்டிருக்கு பேரெதிரி 
  பெண்ணை விட வேறுமுண்டோ?

பெண்சிசுவை சிதைக்குமந்தப்
  பேயவளும் பெண்ணினமே
பெண் எடுக்கப் பொன் வாங்கும் 
  தீயவளும் பெண்ணினமே.

கண்ணசைவில் காளையரை
  கவர்ந்திடவும் பெண்களுண்டு
தன்னினத்தை தரம் தாழ்த்தி
 தரம் கெட்டு போனதுண்டு.

பெண் என்றால் பேயிரங்கும்
  பெண்ணாலே  போர் மூளும்
பெண்ணிவளும் நினைத்திட்டால்
  கொற்றவனும் கொடி துறப்பான்

இவையெல்லாம் பெண்ணுனக்கு
   புகழில்லை வையகத்தில்
வஞ்சப் புகழ்ச்சியில் நீ
   வீழ்ந்திடவே செய்யாதே.


தாயுமாகி நின்றாய் நீ
  தாரமு மானாய் நீ
உலர்மணலில் ஈரம் போல் 
 உற்றவனின் தோழியும் நீ

தலைமுறையை உருவாக்கி 
  தனிப்பெருமை கொள்வதுடன்
தலை சிறந்த உவமையாக 
  உனை நீயே மாற்றிடுவாய்.

சிவனில் பாதி சக்தியென
  சீவனை ஆட்கொள்ள 
மூவுலகும் உனக்கிருக்க 
  முப்பதும் (%) உனக்கெதற்கு?


மண்ணினத்தை வாழ்விக்கும் 
   மகத்தான சேவை செய்யும்
மங்கையுனை போற்றுதலே 
  மாந்தர் எம்  நெறியாகும்.


1 comment: