Thursday, December 30, 2021

                                            காரணம் யாதென


கண்கள் செருக துயில் கொண்டேன் -   கண்ணே

கனவுகளைத் தான் கண்டேன் !

மன்னவன் போலே முடிசூட்டி - கண்ணே 

மக்களையும் தானாண்டேன் !


மாட மாளிகை நானெழுப்பி - கண்ணே

மமதையுடன் தானிருந்தேன் !

சேடிகள் பலரும் புடைசூழ - கண்ணே

செருக்குடனே தானலைந்தேன்!


மறுமை இம்மை எப்பொழுதும் - கண்ணே 

மக்கள் என்னை நினைக்க 

வறுமை தன்னை நானழித்து - கண்ணே 

வளங்கள் பலவும் நான் புரிந்தேன் !


சந்திரன் சூரியன் நான் படைத்தேன் - கண்ணே 

மந்திரமும் நான் பயின்றேன் 

இந்திரன் முதலா தேவர்களை - கண்ணே 

மந்திரியெனவே நான் கொண்டேன் !


மாண்டவர் மீள வரமளித்து - கண்ணே 

மக்களையும் நான் படைத்தேன்

ஆண்டவன் போலே எனை நினைத்து - கண்ணே 

ஆனந்தமய   மாயிருந்தேன் !


இன்னும் பலவும் இப்படியே - கண்ணே

கனவுகள் தொடர்ந்ததடி !

மின்னும் அழகுடன் ஆரணங்கே  - உன்னை 

கண்கள் நேரில் கண்டவுடன் 


நித்திரை என்பது தொலைந்ததடி  - கண்ணே

கனவுகள் காண்பது நின்றதடி !

எத்தனை முறைதான் நான் முயன்றும் - கண்ணே

காரணம் யாதென புரியேனடி!.


No comments:

Post a Comment