Thursday, December 30, 2021

                                            யாராக நான் மாற?     14-04-1991


இளங்கொடியாய் நான் மாற நினைத்திடுவேன் - நீ

இதமுடனே தென்றலென வருவதென்றால்!


மாமலையாய் நான் மாற முனைந்திடுவேன் - நீ

முத்தமிட முகிலெனவே வருவதென்றால்!


கானகமாய் நான் மாற கருதிடுவேன் - நீ

கவிபாட கருங்குயிலாய் வருவதென்றால்!


கடல்மணலாய் நான் மாறிக் கலந்திடுவேன் - நீ

தள்ளாடி வெள்ளலையாய் விழுவதென்றால்!


சிற்பமென மாறிடவே சிந்தைகொள்வேன் - நீ

செதுக்கிடவே சிற்றுளியாய் வருவதென்றால்!


ஓவியமாய் நான் மாறி ஓய்ந்திருப்பேன் - நீ

வடிவமைக்கத் தூரிகையாய் வருவதென்றால்!


கண்ணகத்தே கண்மணியாய் மாறிடுவேன் - நீ

அணைப்பதற்கு இமையெனவே இருப்பதென்றால்!


நானாக நானிருந்து நலம்பெறுவேன் - நீ

நயமுடனே அருகிருக்க இசைந்துவிட்டால்!   

No comments:

Post a Comment