Thursday, December 30, 2021

                                          அமைதியின் தவிப்பு       25-02-1983


நீலக்கடலினிலே நின்றன் முகம் பார்ப்பதினால்

நிலையற்ற வாழ்வினிலே நிம்மதியை தேடுகின்றேன்!


காலைக் காற்றிலுந்தன் காதல் மொழி கேட்பதினால் 

காலம் முழுவதும் யான் கவிதையுளம் நாடுகின்றேன்!


மேலைச் செவ்வானில் சிவந்தமுகம் தோன்றுவதால்

மாலை வரும்முன்னே மனம்மயங்கி தேடுகின்றேன்!


கோலவிழியிரண்டும் குளிர்நிலவாய் காய்வதினால்

மாலைமங்கியிருள் மண்டிவரத் தவிக்கின்றேன்!


ஞால முழுவதிலும் நங்கையுனை காண்பதினால்

சீலம் மறந்தொழுகி சிந்தைநிலை கலங்குகின்றேன்!


வாலைப் பருவமதில் வஞ்சியுனைக் கண்டதினால்

வேலைச் சுழிக்காற்றில் துளியாகித் துடிக்கிறேன்!     

No comments:

Post a Comment