Tuesday, December 28, 2021

 பிறந்த நாள் வாழ்த்துக்களே!  ( Written on My Lady's birthday 24-04-2021)

__________________________
என் கண்களையே நானுமிங்கு காதலிக்கிறேன்
மத்தியிலே மணியாக நீயிருப்பதால்!

என்னிமையை தான் நானும் காதலிக்கிறேன்
கண்மணியாம் உன்னையே காத்து நிற்பதால்!

நாசிகளிரண்டையும் நான் நேசிக்கின்றேன்
சுவாசமாய் நீயம் வந்து சுழன்று செல்வதால்

செவிகளிரண்டையும் நான் சேவிக்கின்றேன்
மாசற்ற உன் குரலில் மயங்கியிருப்பதால்

கைகளிரண்டையும் நான் காதலிக்கிறேன் உனை
வாரியணைத்திடவே வகை செய்வதால்!

கால்களிரண்டையும் நான் காதலிக்கிறேன்
என்னோடு உன்னையுமே தாங்கி நிற்பதால்!

எலும்புகளனைத்தையும் நான் காதலிக்கிறேன் அதில்
லஜ்ஜையோடு மஜ்ஜையாய் நீ கலந்திருப்பதால்!

உதிரத்தை ஓயாமல் நான் காதலிக்கிறேன் அதில்
உயிரணுவாய் நீ கலந்து ஓடி வருவதால்!

குணத்தை நானும் கும்பிட்டு கரம்குவிக்கிறேன் அதில்
குன்றாவிளக்கை ஒப்ப நீ ஒளிர்வதால்!


மனதை நானும் மாளிகை யாக்கி நிற்கிறேன் நீ
மாட்சிமையோடு ள்ளிருந்து ஆட்சி செய்வதால்!

மொத்தத்தில் என்னையே நான் காதலிக்கிறேன் உள்ளே
சத்தமின்றி சாந்தமாய் நீ அமர்ந்திருப்பதால்!

எனக்குள்ளே வீற்றிருக்கும் இனியவளே நமக்கின்று
இனிமையான பிறந்தநாள் வாழ்த்துக்களே!

       வாராமல் போனதென்ன?

(Dedicated to the daughter I never had)

பிஞ்சுக் கால்களால் என்
நெஞ்சை உதைத்திட்டு
கொஞ்சு மொழிபேசி மனம்
கொள்ளை கொள்ளாமல்
வஞ்சகியே நீயும்
வாராமல் போனதென்ன?

வண்ணப் பட்டாடையோடு
சின்ன கொலுசு நடை
சிங்கார புன்னகையால்
எண்ணம் கவர்ந்திடவே
என்னிடம் நீ வாராமல்
எங்கே தான் சென்றாயோ?

தாய்க்கு நல்ல மாமியாராய்
தந்தைக்குற்ற தோழியுமாய்
தம்பிகட்கு தாயுமாகி
தரணிக்கே ராணியென
வளர்த்திடவே நான் நினைத்தேன்
சீரும் சிறப்புடனே
பேரும் பெருமையுடன்
தேரேறி பவனி வர
வாராமல் போனதென்ன?

Thursday, March 8, 2018

This Poem is dedicated to all the women in my life, who played their part to make me as I am today.... Happy women's Day to all my women friends.. 
கண் காது மூக்கும் கைகளும் கால்களும்
அமையும் முன்பே எனைத் தாங்கி
கூன் குருடு செவிடு பேடு நீங்கி நான் பிறக்க
கருவறையின் இருட்டினிலே காத்தவளும் பெண்ணொருத்தி!
கருவறையை நான்தாண்டி தரணிக்கே தான் வந்து
தரையிலே விழும் முன்பே தாங்கியதும் பெண்ணொருத்தி!
பிஞ்சுநடை காலத்தில் தள்ளாடி நான் விழவே
கொஞ்சுமொழி பேசியே எனை எழுப்பியதும் பெண்ணொருத்தி!
பள்ளிப் பருவத்திலே பலர் போற்ற எனைமாற்றி
பாங்குடனே பாடம் பல புகட்டியதும் பெண்ணொருத்தி!
என்னுலகின் முதல் ஆணாம் எந்தையை காட்டியதும்
என்னையும் ஆண்மகனாய் உலகிற்கு உணர்த்தியதும்
ஆதிமுதல் அந்தம்வரை இடைப்பட்ட காலமெல்லாம்
பெண்ணின்றி வாழ்வில்லை பெண்மைக்கு நிகரில்லை!
சக்தியின்றி சிவமில்லை! சிவமின்றி அவளில்லை!
நாணயத்தின் இருபுறம் போல் இருவரின்றி வேறில்லை!
ஆண்மையைப் பெற்று நீயும் அர்த்தநாரி ஆவதற்கு
அர்த்தமுள்ள நாரியாய் அகிலத்தில் வலம்வருவாய்!
பெண்ணிற்கு பலபெருமை பெண்மையில் தானன்றி
ஆணுக்கு இணையான ஆண்மையில் வருவதில்லை!
பெண்மையென்றாலது தாய்மை! பெண்மையென்றாலது மென்மை!
பெண்மையென்றாலது இனிமை! பெண்மையென்றாலது முழுமை!
பெண்மையை கொண்டாட நாளொன்று ஏனிங்கு?
முழுமையுற்ற பெண்மைக்கு முழுவருடம் போதாது!

Friday, December 5, 2014

என்றும் நான் பூஜ்ஜியமே


நானும் ஐம்பதென்று
நாட்காட்டி உணர்த்தியது
நரையும் வழுக்கையுமே
நற்சான்று கூறியது.

ஐந்தினை பெற்றிட்டு
எண்பதினை கடந்தாலும்
எந்தைக்கும் எந்தாய்க்கும்
என்றைக்கும் நானைந்து.

ஒருத்தியின் மகனெனவே
நானிருந்த காலம் போய்
இருவர் சேர்ந்திங்கு
எனை காக்கும் நேரமிது

என் மகனை ஈன்றவளே
எனக்கும் தாயானாள்
தோளுயர்ந்த பிள்ளைகளும்
தோழராய் தெரிகின்றார்.

அரைசதமே ஆனாலும்
ஆசைகள் விடுவதில்லை
முறைவைத்து எனையிழுக்க
அவைகளும் தயங்கவில்லை.

நாட்கணக்கை கூட்டிவிட்டு
நானடைந்த அரைசதமும்
நாளைக்கே வரப்போகும்
நூறாண்டும் பயனில்லை

ஐந்திலே வளையாதது
ஐம்பதிலே வளையுமா
ஐந்திலே விளையாதது
ஐம்பதிலே விளையுமா

வளைப்பதும் நானல்ல
வளைவதும் நானல்ல
விளைப்பதும் நானல்ல
விளைவதும் எனதல்ல

ஐந்தும் நானல்ல
ஐம்பதுவும் நானல்ல
எதுவும் சதமல்ல
எவையும் எனதல்ல

உள்மூச்சும் வெளிமூச்சும்
உணர்த்தியதோ உடல் வயதை
உள்ளிருக்கும் உத்தமனை
உணர்த்துவோர் யாரிங்கே

சீவனை சிவனாக்கும்
சீரிய முயற்சியிலே
என்னை எனக்குணர்த்த
என் குருவை சரணடைந்தேன்

மாயைதனை விலக்கிவிட்டு
மனமடங்கும் காலம் வரை
ஏதுநான் செய்திடினும்
என்றும் நான் பூஜ்ஜியமே


Thursday, August 15, 2013

என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

<சுதந்திர தினத்தன்று சுதந்திரமாய் நான் படைத்த கவிதையினை சுதந்திரமாய் விமர்சியுங்கள் .....தவறுகள் திறுத்தப்படும்

 என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

 என்னருமை சுதந்திரமே எங்கேயிருக்கின்றாய்?
என்னருமை சுதந்திரமே எப்படியிருக்கின்றாய்?

 நாற்பத்தேழில் பெற்றாலும்
 அறுபத்தேழிலும் எழ மறுக்கும் குழவியாய் !

 ஒருவரிடம் ஒடுங்கி நின்ற நூறாண்டு காலம் போய்
மாறி மாறி துச்சாதனரால் துகிலிழக்கும் காரிகையாய் ! 

வாணலியின் சூட்டுக்கு வாட்டம் கண்டு தப்பி விட்டு
அடுப்பினிலே நேராக வீழ்ந்து விட்ட அபலையாய்!

 இருளிலே பெற்றதாலே விடியவே யில்லையென்றார்
விடிந்து வெகு நாளானாலும் நீதான் வீணே காந்தாரியாய்!

 எங்கு சுதந்திரம் எதிலே சுதந்திரம் ?
எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் !

 பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையுமே
பாலினக் கொடுமைகளுக் காளாகும் சுதந்திரம் !

 நூலிழை இடுக்கினிலும் நுழைந்தே புறப்பட்டு
 நூதனமாய் தப்பிக்க சட்டத்திலே சுதந்திரம் !

 பத்து கொலை செய்தாலும் பதவி தரும் சுதந்திரம்!
 வித்தகனாய் வீதிவலம் வந்திடவே சுதந்திரம் !

 வாலில்லா வானரம் போல் கட்சி தாவும் சுதந்திரம்!
காளையை பசுவென்று பால் கறக்கும் சுதந்திரம் !

 பதவியிலிருந்தாலே பலவகையில் சுதந்திரம்!
 பதவிக்கே மானத்தையும் அடகு வைக்க சுதந்திரம் !

 பேசியே ஏமாற்றும் பேயர்களின் காலம் போய்
ஊமைகளும் இங்கு வந்து ஊர் கெடுக்கும் சுதந்திரம் !

 கோலூன்றும் வயதினிலும் கோடிகள் குவித்திடவே
கோலொச்சும் அரசனுக் கொப்பான சுதந்திரம்!

 ஊழலில் முத்தெடுக்க கிழவனுக்கும் சுதந்திரம்!
 ஊர் பணத்தைத் தின்றாலும் உத்தமனாய் கௌரவம் !

 முற்பட வேண்டுமென்ற முனைப்புகள் செத்து விட்டு
பிற்படுத்தப் பட்டவனாய் பெருமை கொள்ளும் சுதந்திரம் !

 நல்லவர் நகர்ந்து நிற்க நயவஞ்சகர்க்கும் சுதந்திரம்!
சொல்லொனா தீமைகளில் திளைத்திடவே சுதந்திரம் !

 தன்னையே அர்ப்பணித்து நாடு மீட்ட சுதந்திரம் – இன்று
 நாட்டையே அர்ப்பணிக்க அமைச்சனுக்கும் சுதந்திரம் !

 ஏழையின் சிரிப்பினில் இறைவன் என்பார்!
இறைவன் ஒருவன் இல்லையென் றுரைப்பார்!

 பசித்திரு விழித்திரு என்றார் !இவரிங்கு
பசியாலுன் விழிமூட பிழைத்து விட்டார் !

 எப்படியும் இருக்கலாம் என்று சொன்னால் சுதந்திரம்!
இப்படியும் இருக்கலாம் சொன்னவர் நம் "கலாம்" !

 ஒரு கலம் சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பார்
 ஒரு "கலாம்" போதாது ! நூறு கோடி வேண்டுமிங்கு !!!

Thursday, December 8, 2011

                                                                          நாம் சேர்ந்து


எல்லோருக்கும் தனிமை என்பது    நண்பரை அறிவதற்கு முன்பே.
ஆனால் தோழி .... எனக்கோ    உன்னை பார்த்த பின்பே.

இரும்பாய் இருந்த என் மனமும் இனிப்பாய் மாறியதோ
  காந்தமென என்னருகே கண்ணே நீ வருகையிலே?

நீ என் மனதில் குடியேறிய பின்பு மனம் கனத்து போனது.
   ஆனாலும் ஏன் பறப்பது போன்ற உணர்வு?

நீ என்னை பார்க்கும் போதெல்லாம் என் இதயம் வேகமாய் துடிக்கிறது.
   பார்த்து........ உனக்கு வலிக்கப் போகிறது.

உன் இனிய குரலை தான் மட்டுமே கேட்டு ரசிக்க முடியுமென கர்வப்பட்டன என் செவிகள் ,
   உன் மௌனத்தையும் அறியும் கண்களை பற்றி அறியும் வரை.


உன் உருவை தான் மட்டுமே கண்டு இன்புற முடியுமென இறுமாந்திருந்தன என் கண்கள்,
   உன் நினைவிலேயே இன்புறும் மனதை பற்றி அறியும் வரை.


அன்பே !  உன்னை என் பெண் சாதியாய் தான் நினைத்திருந்தேன்.
     உன் சாதி குறுக்கே வரும் வரை.

கல்லானாலும் நீயே என் கணவன் என்றாய்.  அந்தோ !
   நீயில்லை என்ற பின் தானே மனம் கல்லானது.

நான் நிம்மதியை தேடி போகிறேன்.  எங்கே ,
     நாம் "சேர்ந்து"     தேடுவோமா?



This was written during my college days..... :)




Tuesday, March 8, 2011

A tribute all women I respect and admire

                                                       பெண்மையின் பரிமாணம்  

தங்கத் தமிழ் பாடல்களில்
  சங்க கால மங்கையரை
மங்கலமாய் போற்றிப் பல
  பழங்கதைகள் சொன்னதுண்டு.

முறத்தினாலே புலியதனை
   துரத்தி விட்ட பெண்ணவளும்
அறப்போரில் மகனிறப்பை
  அறிந்து மகிழ்ந்த தாயவளும்

களப்போரில் கலமேந்தி
  கயவர்தலை கொய்தவளும்
கணவன்தனை தலையிலேந்தி 
  கணிகையிடம் சென்றவளும்

நமன்தனையே எதிர்கொண்டு
  மணந்தவனை மீட்டவளும்
கொண்டவனையிழந்ததாலே
  கொழுநகரை எரித்தவளும்

கற்புடனே கணவனோடு
  கானகமே சென்றவளும் 
அற்பர்களால் துகிலிழந்து
  அருஞ்சபதம் செய்தவளும்

கட்டியவன் சாபத்தாலே 
  கல்லாகி போனவளும்
பெண்ணினத்தின் பிரதிநிதியே
பெண்மைக்கு இலக்கணமே.

பெண்ணிற்கிங்கே பெருமைகளும்
   பாரதத்தில் பலவுண்டு
நாடும் மொழியும்  பெண் என்றார்
  ஓடும் நதியும் பெண் என்றார்

ஏடு கல்வி கலையதுவும்
  எட்டுவித செல்வங்களும்
நாடு காக்கும் வீரமதும்
  நங்கையினம் எனச்சொன்னார்.

பிஞ்சுமனம் கொஞ்சு மொழி 
  பருவமதில் தகப்பன் என்றும்
அஞ்சுகத்தை அரவணைக்க
  அன்பான கணவன் என்றும்

பஞ்சுசிகை காலமதில்
  பாங்குடனே தனயன் என்றும்
பெண்ணிற்கிங்கே காவலென்று 
  பெரியோர்கள் சொன்னதுண்டு.

எந்தவொரு பருவத்திலும்
  ஏந்திழைக்கு காவலது
அச்ச (ம் ) மட நாணமென்று
  அறிந்தவர்கள் சொல்வதுண்டு.

அச்சம் மடம் நாணமென்று
  அஞ்சி வாழ்ந்த மங்கை நீயும்
துச்சமென அச்சம் வென்று
  இச்சையோடு வாழ்கின்றாய்.

அடிமேல் அடி எடுத்து
  அடிமைத்தளை உடைத்திட்டாய்
"இவனுக்கே" நான் நிகரென
    அவனிக்கே உரைத்திட்டாய்.

நிலாச் சோறு ஊட்டியவள் 
  நிலவை பிடிக்க விழைகின்றாய்
கலை பலவும் கற்றுணர்ந்து 
  தலை சிறந்து வாழ்கின்றாய்.

பெண்ணுனக்கு எதிரியென்று
 பெயரளவில் யாருமில்லை
பெண்டிருக்கு பேரெதிரி 
  பெண்ணை விட வேறுமுண்டோ?

பெண்சிசுவை சிதைக்குமந்தப்
  பேயவளும் பெண்ணினமே
பெண் எடுக்கப் பொன் வாங்கும் 
  தீயவளும் பெண்ணினமே.

கண்ணசைவில் காளையரை
  கவர்ந்திடவும் பெண்களுண்டு
தன்னினத்தை தரம் தாழ்த்தி
 தரம் கெட்டு போனதுண்டு.

பெண் என்றால் பேயிரங்கும்
  பெண்ணாலே  போர் மூளும்
பெண்ணிவளும் நினைத்திட்டால்
  கொற்றவனும் கொடி துறப்பான்

இவையெல்லாம் பெண்ணுனக்கு
   புகழில்லை வையகத்தில்
வஞ்சப் புகழ்ச்சியில் நீ
   வீழ்ந்திடவே செய்யாதே.


தாயுமாகி நின்றாய் நீ
  தாரமு மானாய் நீ
உலர்மணலில் ஈரம் போல் 
 உற்றவனின் தோழியும் நீ

தலைமுறையை உருவாக்கி 
  தனிப்பெருமை கொள்வதுடன்
தலை சிறந்த உவமையாக 
  உனை நீயே மாற்றிடுவாய்.

சிவனில் பாதி சக்தியென
  சீவனை ஆட்கொள்ள 
மூவுலகும் உனக்கிருக்க 
  முப்பதும் (%) உனக்கெதற்கு?


மண்ணினத்தை வாழ்விக்கும் 
   மகத்தான சேவை செய்யும்
மங்கையுனை போற்றுதலே 
  மாந்தர் எம்  நெறியாகும்.